பஸ் நிலையத்தில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும்
ஆற்காடு பஸ் நிலையத்தில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி நகர மன்ற கூட்டம் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் கிருஷ்ணாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
தற்காலிக நிழற்கூடம்
பொன். ராஜசேகர்:- ஆற்காடு பஸ் நிலையம் மற்றும் மாங்காய் மண்டி ஆகிய இடங்களில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிழற்கூடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆற்காடு பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவர்கள் வெயில் மற்றும் மழையில் நிற்பதை தவிர்க்க தற்காலிக நிழற்கூடம் அமைக்க வேண்டும்.
செல்வி:- 30 வார்டுகளிலும் ஓட்டு போட்டு நகர மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
அனுஅருண்:- துப்புரவு பணியாளர்கள் முக கவசம், கை உறை இல்லாமல் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறுகின்றனர். மேலும் நகராட்சி அலுவலகம் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.
வரி வசூல்
கண்ணன்:- எனது வார்டில் ஒரு சில பகுதிகளில் சாலை வசதி சரியாக இல்லை. அங்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். நகராட்சி பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் தலையிட்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
குணாளன்:- எனது வார்டில் புதிதாக வீடு கட்டி உள்ளனர். அவர்கள் முறைப்படி வரி செலுத்துவதில்லை. அவர்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும். மேலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம்:- அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இல்லை. போதுமான ஆசிரியர்களும் இல்லாததால் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.