அழகு சாதன பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து


அழகு சாதன பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 8 Aug 2023 5:45 AM IST (Updated: 8 Aug 2023 5:46 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அழகு சாதனங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2½ கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

கோயம்புத்தூர்

காட்டூர்

கோவையில் அழகு சாதனங்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2½ கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

அழகு சாதன பொருட்கள் கடை

கோவை கிராஸ்கட் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் நிகித் (வயது 33). இவர் ராஜாஜி வீதியில் 3 மாடி கொண்ட கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

தீப்பற்றி எரிந்தது

சிறிது நேரத்தில் அழகு சாதன கடையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த தீ கடை முழுவதும் பரவி மளமளவென பயங்கரமாக எரிந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக கோவை ரெயில்நிலையம் அருகே உள்ள தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் அண்ணாதுரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களின் தண்ணீரை பீய்ச்சியடித்து அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.2½ கோடி பொருட்கள் நாசம்

முதல்கட்ட விசாரணையில் தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தீ விபத்தில் அழகு சாதன கடையில் இருந்த ரூ.2½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீவித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story