மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து


மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
x

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கரூர்

மாநகராட்சி குப்பை கிடங்கு

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி கொண்டே இருந்தது. மேலும் குப்பைகளில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கரூர்-வாங்கல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் அந்தசாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன போக்குவரத்தை திருப்பி விட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


Next Story