ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.10 கோடிக்கு மேல் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
பயங்கர தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தெக்குப்பட்டு ஊராட்சியில் ஒரே வளாகத்தில் 2 ஊதுபத்தி தொழிற்சாலைகளும், ஒரு அகர்பத்தி மற்றும் கொசுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பணிக்கு யாரும் வரவில்லை. இருப்பினும் 25 பேர் இரவு பணிக்கு வருவதற்காக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து ஏற்படும் முன்பு அந்த தொழிற்சாலைக்குள் அதிரவைக்கும் அளவுக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.
அதன் பின்பு தொடர்ந்து தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவி எரிய தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
4 மணி நேரம் போராடி அணைப்பு
உடனடியாக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்க போராடினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார் குமார், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
எரிகல் விழுந்ததா?
தீவிபத்து நடந்த தொழிற்சாலையில் வித்தியாசமான கற்கள் கிடந்தன. அவைல எரிகற்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வேலூரில் இருந்து தடயவியல் துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அங்கு கிடந்த கற்களை சேகரித்து எரிகற்களாக இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர் அந்த கற்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் விழுந்த எரிகல் தொடர்பாகவும், வாணியம்பாடியை அடுத்த பெத்தவேப்பம்பட்டு பகுதியில் ஒரு நிலத்தில் விழுந்த எரிகல் தொடர்பாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள குன்னத்தூர் பகுதியில் விழுந்த கல் தொடர்பாகவும், சமீபத்தில் வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் திடீரென பூமி விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட கற்கள் குறித்தும் விசாரணை நடத்தி, அதற்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கட்டிடங்கள் அதிர்ந்தன
தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டபோது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனால் கம்பெனியின் மேற்கூரைகள் சிதறி நான்கு புறமும் விழுந்துள்ளது. புத்துக் கோவில், அம்பலூர், எக்லாசபுரம், வடக்குப்பட்டு, ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு தூரத்திற்கு கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.
இதனால் இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலைகள் முறையாக அனுமதி பெற்று இயங்கி வருகின்றனவா என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் வெடி பொருள்கள் ஏதாவது வைக்கப்பட்டு இருந்ததா என கட்டிடப் பகுதியில் ஏற்பட்ட விரிசல் பகுதியையும், மேற்கூரைகளின் சிதறல்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.