குப்பை கிடங்கில் பயங்கர தீ


குப்பை கிடங்கில் பயங்கர தீ
x

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நச்சு புகை மூட்டத்தால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நச்சு புகை மூட்டத்தால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர்.

பற்றி எரிந்த தீ

நாகர்கோவில் மாநகரில் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் 60 டன் குப்பைகள் மாநகரில் 12 இடங்களில் உள்ள உரமாக்கும் கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகள் பீச்ரோடு வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல கிடக்கின்றன. அந்த குப்பைகளை பயோ மெட்ரிக் முறையில் உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதே போல நேற்று மாலையும் குப்பை குவியலில் தீ விபத்து ஏற்பட்டது. குப்பை குவியலில் சிறிது இடத்தில் மட்டும் லேசாக எரிந்து கொண்டு இருந்த தீயானது நேரம் செல்ல செல்ல பல இடங்களுக்கு பரவியது. காற்றும் வேகமாக வீசியதால் தீ பரவல் அதிகமாக இருந்தது.

தீயணைப்பு பணி

இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே மேற்கொண்டு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீ பிடிக்காத இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்த னர். இந்த பணி இரவு வரை நீடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் படாதபாடு பட்டனர். எனினும் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

இதற்கிடையே குப்பையில் பற்றி எரியும் தீயில் இருந்து குபு..குபு...வென நச்சு புகை வெளியேறியது. அந்த புகையானது காற்று வீசும் திசையில் பரவியது. அந்த வகையில் வட்டவிளை, வேதநகர் மற்றும் இளங்கடை ஆகிய இடங்களில் நச்சு புகை மூட்டமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீட்டுகளுக்குள்ளும் புகை பரவியதால் இரவில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேயர் ஆய்வு

இந்த நிலையில் குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் மகேஷ் இரவு 10 மணி அளவில் திடீரென குப்பை கிடங்குக்கு வந்து ஆய்வு செய்தார். எந்தெந்த பகுதிகளில் எல்லாம் தீ பற்றி எரிகிறது. அதை அணைப்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு அதிகாரிகளிடம் பேசினார். அப்போது "குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் அப்பகுதி மக்கள் புகை மூட்டத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே தீயை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தீயை முழுமையாக அணைக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆய்வின்போது கவுன்சிலர் அனிலா சுகுமாரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story