பேச்சிப்பாறை அருகே 2 கூண்டுகள் வைத்தும் சிக்கவில்லை:மேலும் 4 ஆடுகளை கடித்துக்கொன்ற புலி


பேச்சிப்பாறை அருகே 2 கூண்டுகள் வைத்தும் சிக்கவில்லை:மேலும் 4 ஆடுகளை கடித்துக்கொன்ற புலி
x

பேச்சிப்பாறை அருகே தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் புலி நேற்று மேலும் 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே தொழிலாளர்களை அச்சுறுத்தி வரும் புலி நேற்று மேலும் 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது.

அட்டகாசம் செய்யும் புலி

பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்பு மல்லமுத்தன்கரை, புரையிடம், மூக்கறைக்கல் பழங்குடி பகுதிகளில் புலி ஒன்று புகுந்து ஆடுகளையும், பசுமாடுகளையும் வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக அதிகாலை வேளைகளில் பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைகிறார்கள். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில் புலியை பிடிக்கும் வகையில் வனத்துறை சார்பில் மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பு மற்றும் சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் புலி கூண்டுக்குள் சிக்கவில்லை. மேலும் களியல் வனச்சரகத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் தினமும் இரவு, பகலாக புலியைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 4 ஆடுகளை கொன்றது

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பில் புலி புகுந்தது. அங்கு ஞானசுந்தரம் என்ற தொழிலாளியின் வீட்டின் கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை வேட்டையாடி கடித்துக் குதறியது. அப்போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அவர்களை பார்த்தும் புலி அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து அவர்கள் கொட்டகையில் சென்று பார்த்த போது அங்கு கட்டி வைத்திருந்த 4 ஆடுகள் இறந்து கிடந்தன. ஒரு ஆடு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைபார்த்த ஞானசுந்தரமும் அவரது குடும்பத்தினரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

பயிற்சி பெற்ற வல்லுனர் படை

இந்தநிலையில் தமிழக வனத்துறையில் புலியை பிடிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்ற வல்லுனர் படையை உடனடியாக சிற்றாறு பகுதிக்கு வரவழைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் பி.நடராஜன் கூறியதாவது:-

சிற்றாறு மற்றும் மூக்கறைக்கல் குயிருப்புகளில் புலி புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அதே வேளையில் வனத்துறையினரும் புலியை பிடிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும் புலி சிக்காமல் உள்ளது. இந்தநிலையில் நாட்கள் கடந்து செல்லும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே புலியை பிடிக்கும் வகையில் தமிழக வனத்துறையில் உள்ள சிறப்பு பயிற்சிப் பெற்ற வல்லுனர் படையினரை உடனடியாக இந்த பகுதிக்கு அனுப்பி புலியை பிடிக்க மாவட்ட வனத்துறை அலுவலரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story