சாலையோர புதரில் ஓய்வெடுத்த புலி
தமிழக-கர்நாடக எல்லையில் சாலையோர புதருக்குள் ஒரு மணி நேரம் புலி ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
கூடலூர்
தமிழக-கர்நாடக எல்லையில் சாலையோர புதருக்குள் ஒரு மணி நேரம் புலி ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
சாலையை கடக்கின்றன
நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா சரணாலய பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வனவிலங்குகள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த வாரம் புலி ஒன்று தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா பாலம் அருகே வந்தது. பின்னர் அங்கு சாலையை கடந்து மறுமுனைக்கு செல்ல முடியாமல் தவித்தது. புலியை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்தினர். இதையடுத்து புலி வந்த வழியாக திரும்பி சென்றது. அதன் பின்னர் வாகனங்கள் இயக்கப்பட்டன.
ஓய்வெடுத்த புலி
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அதே பகுதியில் சாலையோர புதருக்குள் புலி ஒன்று படுத்து கிடந்து ஓய்வெடுத்தது. இதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டு அச்சம் அடைந்தனர். இருப்பினும், புலி அவர்களை பார்த்தும் எதையும் பொருட்படுத்தாமல் புதருக்குள் நீண்ட நேரம் படுத்து கிடந்தது. தொடர்ந்து சாலையில் வாகனங்கள் சென்று வந்தன.
அதன் பின்னர் 1 மணி நேரத்துக்கு பிறகு புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. சாலையோர புதரில் ஓய்வெடுத்த புலியை சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக உள்ளது.