மினி லாரியில் கடத்திய ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்
மினி லாரியில் கடத்திய ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி உத்தரவுப்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் மேற்பார்வையில், ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு வேலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் சுமார் ஒரு டன் குட்கா, பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மினி லாரியுடன் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 52), திமிரியை அடுத்த கருங்காலி குப்பத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் வெங்கடேசன் (27) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.