பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சாய்ந்ததால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மரம் விழுந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) சாய்ந்ததால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மரம் விழுந்தது
பொள்ளாச்சி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்காமல் மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில் வீதியில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்த மின் மாற்றியும் (டிரான்ஸ்பார்மர்) ரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மின் மாற்றி விழும் போது யாரும் வராததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை தொடர்ந்து உடனடியாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக மகாலிங்கபுரம் பகுதியில் மின் வினியோகம் தடைப்பட்டது. இதற்கிடையில் சாய்ந்த மரத்தை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு வருவாய் துறை அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தும் ஆய்வு செய்து மரத்தை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
அனுமதி கொடுக்கவில்லை
மகாலிங்கபுரம் குடிநீர் தொட்டி வளாகத்தில் உள்ள மரங்கள், விநாயகர் கோவில் வீதியில் உள்ள மரம், வி.கே.வி. லே-அவுட்டில் உள்ள ஒரு மரமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அதை அகற்றுமாறு நகராட்சிக்கு ஏற்கனவே கடந்த 4 மாதத்திற்கு முன் கடிதம் கொடுக்கப்பட்டது. நகராட்சியில் இருந்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் மோசமான மரங்களை ஆய்வு செய்து அகற்றுவதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த மாதம் குடிநீர் தொட்டி வளாகத்தில் இருந்த மரம் விழுந்து 2 பெண்கள் காயமடைந்தனர். தற்போது மின் மாற்றி விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது சேதமடைந்த மின் மாற்றியை சீரமைக்க ரூ.8 லட்சம் வரை செலவாகும். மேலும் சில பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்வதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வருவாய் துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து மோசமான மரங்களை வெட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வறு அவர்கள் கூறினார்கள்.






