பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடி மாணவர்:உதவி கேட்டு தேனி கலெக்டரிடம் மனு
பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடி மாணவர் தனது படிப்புக்கு உதவி கேட்டு தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
பழங்குடியின மாணவர்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா வெள்ளகவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் மலைக்கிராமம். இந்த கிராமத்துக்கு சாலை வசதிகள் கிடையாது என்பதால் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை வழியாக சின்னூர் கிராமத்துக்கு மக்கள் சென்று வருகின்றனர். அங்குள்ள மக்களும் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பெரியகுளத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த பெரியராஜ் மகன் விஷால் (வயது 14) என்ற பழங்குடியின மாணவர் தனது அண்ணன் சத்தியராஜூடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். தனது பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் தவிப்பதாகவும், அதற்கு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளதாகவும் மாணவர் விஷால் கூறினார்.
படிக்க உதவி
இதுகுறித்து மாணவர் விஷால் கூறும்போது, 'நான் போடியில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, போடியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தேன். முறையான அனுமதி பெறவில்லை என்று அந்த விடுதி மூடப்பட்டதால், தங்குவதற்கு இடமின்றி சொந்த ஊருக்கு சென்று விட்டேன். சில மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெற்று பெரியகுளம் பகுதியில் உள்ள பள்ளியில் சேர முயற்சி செய்தேன்.
மாற்றுச் சான்றிதழ் பெற்றுவிட்ட நிலையில், பெரியகுளத்தில் அரசு பள்ளியில் சேர்க்க மறுக்கின்றனர். அரசு மாணவர் விடுதியில் சேர்த்துக் கொள்வதாக கூறுகிறார்கள். எனவே, என்னை பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்கி எனது படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்' என்றார்.
பின்னர் அவர், கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணியை தொடர்பு கொண்டு, மாணவரை உடனடியாக பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.