லாரி மோதியதில் முட்டை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் அருகே லாரி மோதியதில் முட்டை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் விக்கிரவாண்டிக்கு புறப்பட்டது. கோலியனூர் கள்ளப்பட்டு செல்லும் பாதை அருகில் அந்த சரக்கு வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அதன் டிரைவர் சிறுநீர் கழிக்க சென்றார். அந்த சமயத்தில் அவ்வழியாக பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென அந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த பெட்டிக்கடையின் மீது டிப்பர் லாரி சாய்ந்தது.
இந்த விபத்தில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த முட்டைகள் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் டிப்பர் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், அங்கு சென்று உடையாத நிலையில் இருந்த சில முட்டைகளை அள்ளிச்சென்றனர். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.