இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல இருந்த வேலூா் பயணி கைது


இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல இருந்த வேலூா் பயணி கைது
x

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல இருந்த வேலூா் பயணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும், ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது வேலூரைச் சேர்ந்த சந்திரன் (வயது50) என்பவர் இந்த விமானத்தில் செல்ல வந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஏமன் நாட்டுக்கு சென்று, 6 மாதங்கள் அங்கு தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

இந்திய அரசு ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் சொல்லக்கூடாது என்ற தடையை, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தி வருகிறது. அந்த தடையை மீறி செல்பவர்கள், மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து,கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதையும் மீறி சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் இவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு செல்வதற்காக திட்டம் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலைய போலீசார், சந்திரனை கைது செய்து, தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றது,மற்றும் பாஸ்போா்ட் விதிகளின் படியும் வழக்குப்பதிவு செய்து,மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story