சேலத்தில் துரித உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்ட சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி-சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
சேலத்தில் சில்லி சிக்கன் கடையில் வாடிக்கையாளர் சாப்பிட்ட சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
கரப்பான் பூச்சி
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள ஒரு சில்லி சிக்கன் கடைக்கு நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். பின்னர் அவர் அந்த கடையில் சுடச்சுட பொறிக்கப்பட்ட சில்லி சிக்கனை வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கரப்பான் பூச்சியை கோழிக்கறிவுடன் சேர்த்து எண்ணெயில் போட்டு பொறித்தது தெரியவந்தது. இதுகுறித்து வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விசாரணை நடத்த முடிவு
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் கேட்ட போது, சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்தது தொடர்பாக புகார் வந்தது. அப்போது அவரிடம் எந்த இடம், கடையின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் உணவு பாதுகாப்புத்துறையின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கும் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு விவரமாக அனுப்பி வைக்குமாறு கூறி உள்ளோம். அந்த புகார் வந்தவுடன் அடுத்தக்கட்டமாக இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.