உய்யகொண்டான் வாய்க்காலில் நீருக்கு மேலே ஈரடுக்கு நடைபயிற்சி ரவுண்டானா


உய்யகொண்டான் வாய்க்காலில் நீருக்கு மேலே ஈரடுக்கு நடைபயிற்சி ரவுண்டானா
x

உய்யகொண்டான் வாய்க்காலில் நீருக்கு மேலே ஈரடுக்கு நடைபயிற்சி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.

திருச்சி

உய்யகொண்டான் வாய்க்கால்

திருச்சி கோர்ட்டு அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் கரையில், புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தென்னூர் அண்ணாநகர் பாலம் வரை 780 மீட்டர் தொலைவுக்கு நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பேவர் பிளாக் மூலம் இரு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழிநெடுகிலும், தற்போது மரங்கள் நன்கு வளர்ந்து பசுமையாக உள்ளன. மேலும், ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள் இருப்பதாலும், திறந்தவெளியில் உடற்பயிற்சிக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாலும் நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த நடைபாதைக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உய்யகொண்டான் வாய்க்காலின் மறுகரையில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தையொட்டிய பகுதியில் ரூ.2 கோடியில் கடந்தாண்டு மேலும் ஒரு நடைபாதை அமைக்கப்பட்டது. அங்கு பொதுமக்களை கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளை சிலை, மின் அலங்காரங்களுடன் கூடிய மீன் வடிவலான நீரூற்று, உய்யகொண்டான் வாய்க்காலில் படித்துறை, சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், அமர்ந்து ஓய்வெடுக்க ஆங்காங்கே இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டன.

ஈரடுக்கு நடைபயிற்சி ரவுண்டானா

இந்தநிலையில் இந்த 2 நடைபாதைகளையும் இணைக்கும் வகையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் மீது அழகிய ரவுண்டானா அமைக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக கட்டிடக்கலை பொறியாளர்கள் உதவியுடன் தற்போது அதற்கான பூர்வாங்க பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதில் உய்யகொண்டான் வாய்க்கால் மீது தற்போதுள்ள பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கிழக்கு பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.

இந்த ரவுண்டானாவின் மையப்பகுதியில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க இருக்கைகள், வட்டவடிவிலான படிக்கட்டுகள், சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. நீருக்கு மேலே 2 அடுக்கு நடைபயிற்சி தளங்களுடன் அமைக்கப்படும் இந்த அழகிய ரவுண்டானா நிச்சயம் பொதுமக்களை கவரும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story