ரூ.4 ஆயிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மணிபர்ஸ் 4 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு


ரூ.4 ஆயிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மணிபர்ஸ்   4 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைப்பு
x

ரூ.4 ஆயிரத்துடன் கண்டெடுக்கப்பட்ட மணிபர்ஸ் 4 ஆண்டுகளுக்கு பின் உரியவரிடம் ஒப்படைத்த மூதாட்டிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலம்(வயது 75). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் மகன் சீனிவாசனுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். கமலம் கடந்த 2018-ம் ஆண்டு ஒருநாள் மாலை தனது முந்திரி தோப்பு அருகே ஒரு மணிபர்ஸ் கிடந்ததை கண்டெடுத்தார். அதில் கொஞ்சம் பணம் இருந்ததால் தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்து விட்டார். மணிபர்சில் விலாசம் எதுவும் இல்லை. வள்ளலார் படம் ஒன்று இருந்துள்ளது. எனவே மணிபர்ஸ் யாருடையது என்று தெரியாததால் சீனிவாசனும் பத்திரமாக வீட்டில் எங்கேயோ வைத்து விட்டார். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, சில நாட்களுக்கு முன்பு ஒரு துக்க நிகழ்ச்சியில் சீனிவாசன், ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் பார்ப்பதற்கு வள்ளலாரின் பக்தர்போல் இருந்ததால், அவரிடம் நீங்கள் எப்போதாவது உங்களது மணிபர்சை தவற விட்டு உள்ளீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஆமாம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணத்துடன் மணிபர்சை கவரப்பாளையத்தில் தவற விட்டு விட்டேன். மேலும் அவர், தான் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த செந்தில்முருகன் என கூறியுள்ளார். அதற்கு சீனிவாசன் மணிபர்சில் எவ்வளவு பணம் வைத்திருந்தீர்கள் எனக்கேட்டுள்ளார். சுமார் ரூ.4,000 இருக்கும் என்று கூறியுள்ளார். உடனடியாக சீனிவாசன் தனது வீட்டில் வைத்திருந்த மணிபர்சை தேடி கண்டுபிடித்து செந்தில்முருகளிடம் ஒப்படைத்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மணிபர்சை பிரித்து பார்த்துள்ளனர். அதில் ரூ.3,904 இருந்துள்ளது. இதையடுத்து சீனிவாசன், கமலம் குடும்பத்தினருக்கு அப்பகுதி மக்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


Next Story