3 கடைகளை உடைத்த காட்டு யானை


3 கடைகளை உடைத்த காட்டு யானை
x

தேவர்சோலை பஜாருக்குள் புகுந்து 3 கடைகளை காட்டு யானை உடைத்தது. மேலும் பொதுமக்கள் வன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

தேவர்சோலை பஜாருக்குள் புகுந்து 3 கடைகளை காட்டு யானை உடைத்தது. மேலும் பொதுமக்கள் வன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைகளை உடைத்தது

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. பொதுமக்களின் வீடுகள், பயிர்கள் தினமும் சேதமாகி வருகிறது. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், வனத்துறை தரப்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேவர்சோலை பஜாரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. தொடர்ந்து மெயின் ரோட்டில் நடந்து வந்தது. பின்னர் சாலையோரம் இருந்த அலியார் டீக்கடையை யானை உடைத்தது. தொடர்ந்து அக்பர் என்பவரது மளிகை கடையை உடைத்து, அங்கிருந்த உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தியது. மேலும் அதன் அருகே இருந்த முகமது குட்டி என்பவரது கடையையும் காட்டு யானை உடைத்தது.

பொதுமக்கள் வாக்குவாதம்

பின்னர் அதிகாலையில் காட்டு யானை அங்கிருந்து சென்றது. நேற்று காலை வழக்கம் போல் அப்பகுதியில் பொதுமக்கள் சென்று பார்த்த போது கடைகளை யானை சேதப்படுத்தி இருப்பது தெரியவந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமானது தெரியவந்தது.தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் வன ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி வன ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வீடு தரைமட்டமானது

இதேபோல் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி ஆத்தூர் பகுதியில் தொழிலாளியின் வீட்டை காட்டு யானை உடைத்து தரைமட்டமாக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத்தலைவர் சகாதேவன், செல்வரத்தினம் உள்பட மன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டனர்.


Next Story