பந்தலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

பந்தலூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தன.
பந்தலூர்: பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைகடை, தட்டாம்பாறை, எடத்தால், முருக்கம்பாடி கோட்டப்பாடி, கருத்தாடு உள்பட பல்வேறு பகுதிகளில்காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் தோட்டங்களுக்குள் நுழைந்து வாழை, தென்னை பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்துகிறது. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்தி பொதுமக்களையும் தாக்குகின்றன. அதன்படி நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை புகுந்தது.பின்னர் குடியிருப்புகளை முற்றுகையிட்டு, பொதுமக்களை விரட்டியது. தொடர்ந்து தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. இந்த நிலையில் நேற்றுமாலை மீண்டும் ஊருக்குள் புகுந்த காட்டுயானை இரைதேடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. யானையை கண்டதும் தேயிலை தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து காட்டுயானை தேயிலை தோட்டத்திற்குள் இருந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்களை சேதப்படுத்திவிட்டு சிறிதுநேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.






