வால்பாறை அருகே கேரள அரசு பஸ்சை துரத்திய காட்டு யானை- தந்தத்தால் குத்தியதால் பரபரப்பு
வால்பாறை அருகே கேரள அரசு பஸ்சை துரத்திய காட்டு யானை தந்தத்தால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறை அருகே கேரள அரசு பஸ்சை துரத்திய காட்டு யானை தந்தத்தால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானை
வால்பாறை அருகில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் மளுக்கப்பாறை-சாலக்குடி வனப்பகுதி சாலையில் ஆணக்காயம் மற்றும் அம்பலப்பாறை இடைப்பட்ட பகுதியில் கடந்த 10 நாட்களாக காட்டு யானை வழியில் செல்லும் வாகனங்களை துரத்துவது சாலையை விட்டு இறங்கி வனப் பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரம் சாலையில் நிற்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புக்கு செல்லும் வனத்துறையினரையும் துரத்தி வருகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கேரள வனத்துறையினர் மளுக்கப்பாறை- சாலக்குடி சாலையில் கேரள அரசு பஸ், தனியார் பஸ் மற்றும் லாரிகள் மட்டும் செல்வதற்கு அனுமதித்து விட்டு மற்ற அனைத்து வாகனங்களுக்கும் வருகிற 30 -ந் தேதி வரை தடை விதித்துள்ளனர்.
கேரள பஸ்சை வழிமறித்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மளுக்கப்பாறையிலிருந்து சாலக்குடி சென்ற கேரள அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்துள்ளது. பஸ்சின் டிரைவர் பஸ்சை பின் நோக்கி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் யானையும் பஸ்சை நோக்கி ஓடி வந்து உள்ளது. திடீரென அந்த ஆண் யானை ஆவேசமடைந்து பஸ்சின் முன் பகுதியில் தந்தத்தால் குத்தியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து சென்றுள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காட்டு யானை அட்டகாசத்தை கட்டுப்படுத்த கேரள வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த காட்டு யானை அட்டகாசத்தால் வால்பாறை பகுதிக்கு கேரள மாநிலம் சாலக்குடி வழியாக வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வால்பாறை, சோலையாறு நகர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான வியாபாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த யானைக்கு கபாலி என்று அதிரப்பள்ளி பகுதி மக்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.