வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு


வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 July 2023 1:30 AM IST (Updated: 31 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் சாலையை கடக்கும் போது, வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

முதுமலையில் சாலையை கடக்கும் போது, வாகனங்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பது வழக்கம். இந்த வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் காட்டு யானைகள் மாயாற்றில் தண்ணீர் அருந்துவதற்காக சாலையோரம் வந்து புற்களை மேய்ந்தபடி நின்று வருகின்றன.

இதை அறியாத வெளிமாநில சுற்றுலா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை கண்டு ரசித்தவாறு சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது சில யானைகள் வாகனங்களை திடீரென துரத்தி வருகின்றன. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முதுமலை கார்குடி அருகே சாலையோரம் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது சிலர் தங்கள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

துரத்தியதால் பரபரப்பு

இந்த சமயத்தில் திடீரென ஆவேசம் அடைந்த காட்டு யானை வாகனங்களை துரத்த தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து வாகனங்களை திருப்பி வந்த வழியாக திரும்பி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக காட்டு யானையிடம் வாகனங்கள் சிக்க வில்லை. பின்னர் சிறிது நேரம் நின்றிருந்த காட்டு யானை மெதுவாக சாலையை கடந்து சென்றது.

அதன் பின்னர் வாகனங்களை ஓட்டி சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலை மற்றும் அதன் ஓரம் நின்றிருந்தால் தொலைதூரத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அதன் அருகே செல்லக்கூடாது. பின்னர் சாலையை கடந்த பிறகு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும். இதை மீறுவது ரோந்து பணியின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story