வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
ஓவேலியில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10 மணிக்கு காட்டு யானை வீட்டை முற்றுகையிட்டது. தொடர்ந்து வீட்டின் பின்பக்கம் உள்ள சமையல் அறையை யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமானது. இதனால் அச்சமடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் கூச்சலிட்டனர். தகவல் அறிந்த பொதுமக்கள், வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதில் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் சேதம் அடைந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து ஓவேலி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சேரம்பாடி அருகே காப்பிக்காடு பகுதியில் பந்தலூர் செல்லும் சாலையில் 5 காட்டு யானைகள் உலா வந்தன. அப்போது வாகனங்களை வழிமறித்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்துக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தினர். பின்னர் யானைகள் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1 பத்து லைன்ஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டன. அங்கு பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அதே பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.