பவானிசாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்த காட்டு யானை; ரோட்டில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


பவானிசாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்த காட்டு யானை; ரோட்டில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
x

பவானிசாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்த காட்டு யானை, ரோட்டில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணை பூங்காவுக்குள் நுழைந்த காட்டு யானை, ரோட்டில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன.

சில யானைகள் தண்ணீரில் குளித்து கும்மாளம் போட்டுவிட்டு சென்றுவிடும். சில யானைகள் காட்டுக்குள் செல்லாமல் அணையின் மேல் பகுதிக்கு வந்து நடைபோடும். மேலும் அணையின் கீழ்பகுதியில் உள்ள பூங்காவுக்குள்ளும் நுழைந்து விடுவது உண்டு.

பூங்காவுக்குள் நுழைந்தது

இந்தநிலையில் நேற்று அதிகாலை பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த ஒரு ஆண் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அணையின் மேல்பகுதி வழியாக நடந்து வந்து அப்படியே பூங்காவுக்குள் நுழைந்துவிட்டது.

அதிகாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் பூங்காவில் இல்லை. அதேசமயம் பணியில் இருந்த பொதுப்பணித்துறை பணியாளர்கள் காட்டு யானையை பார்த்து அலறியடித்துக்கொண்டு பூங்காவில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

கடைகளை தட்டியது

பூங்காவில் உள்ள கடைகளில் தின்பண்டம் ஏதாவது கிடைக்குமா? என்று துதிக்கையை விட்டு யானை நோட்டமிட்டது. ஆனால் கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால், மெயின் கதவு வழியாக பூங்காவை விட்டு வெளியேறியது.

பின்னர் பூங்காவின் எதிரே உள்ள கடைவீதி ரோட்டில் ராஜ நடை நடந்து சென்றது. கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் யானைக்கு ருசிக்க எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு கடையாக துதிக்கையால் தட்டிப்பார்த்தபடியே பவானிசாகர் ரோட்டுக்கு வந்தது.

அலறியடித்து ஓட்டம்

அணை எதிரே உள்ள ரோட்டில் வேகமாக நடந்து சென்ற காட்டு யானையை பார்த்து அங்கு நடமாடிக்கொண்டு இருந்த பொதுமக்களும் அலறியடித்து ஓடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பூங்கா மற்றும் ரோட்டில் காட்டு யானை சுற்றித்திரியும் தகவல் கிடைத்ததும் பவானிசாகர் மற்றும் விளாம்முண்டி வனத்துறையினர், பவானிசாகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் வனத்துறை வாகனத்தில் பொருத்தியிருந்த ஒலிப்பானை இயக்கி சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

பவானிசாகர் அணை பூங்காவுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விடுவதால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story