மரங்களை சாய்த்து போட்ட காட்டு யானை
தேவர்சோலை அருகே சாலையில் காட்டு யானை மரங்களை சாய்த்து போட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
தேவர்சோலை அருகே சாலையில் காட்டு யானை மரங்களை சாய்த்து போட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரங்களை சாய்த்தது
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், செம்பக்கொல்லி, மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை தினமும் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டும், காட்டு யானை நுழைவதை தடுக்க முடியவில்லை.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் அகழி தோண்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானை ஊருக்குள் வந்தது. தொடர்ந்து ஒற்றவயல்- மச்சிக்கொல்லி செல்லும் சாலையில் முகாமிட்டது. பின்னர் அப்பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரங்களை காட்டு யானை சாய்த்து போட்டது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை வரை அப்பகுதியில் காட்டு யானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. பின்னர் முதுமலை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடங்கினர்.
இருப்பினும், காட்டு யானை சாலையின் குறுக்கே மரங்களை சாய்த்து போட்டதால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, காட்டு யானை மரங்களை சாய்த்து போட்டு அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.