தென்னை மரங்களை மின் கம்பிகள் மீது சரித்து போட்ட காட்டு யானை


தென்னை மரங்களை மின் கம்பிகள் மீது சரித்து போட்ட காட்டு யானை
x
தினத்தந்தி 3 Aug 2023 4:30 AM IST (Updated: 3 Aug 2023 4:31 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே தென்னை மரங்களை காட்டு யானை மின் கம்பிகள் மீது சரித்து போட்டதால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

தேவர்சோலை அருகே தென்னை மரங்களை காட்டு யானை மின் கம்பிகள் மீது சரித்து போட்டதால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

காட்டு யானைகள்

கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் பொதுமக்களையும் தாக்குகிறது. இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், செம்பக்கொல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

அங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இந்தநிலையில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வந்து வாகனங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வன ஊழியர்கள் இல்லாத நேரத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

மின் வினியோகம் பாதிப்பு

இந்தநிலையில் மச்சிக்கொல்லி பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு காட்டு யானை ஊருக்குள் வந்தது. பின்னர் நபிஷா என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. தொடர்ந்து அங்கு தென்னை, பாக்கு மரங்களை சரித்து கீழே போட்டது. இதில் தென்னை மரம் அப்பகுதியில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது.

இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. பின்னர் காட்டு யானை அங்கிருந்து சென்றது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரியத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து மாலையில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. மேலும் காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.


Related Tags :
Next Story