வாகனங்களை வழிமறித்த காட்டுயானை
வாகனங்களை வழிமறித்த காட்டுயானை
பொள்ளாச்சி
ஆழியாறு-வால்பாறை சாலையில் வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது.
காட்டுயானை
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டம், கூட்டமாக வெளியேறி ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் யானைகள் அணைக்கு வருவது குறைந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென்று வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஆழியாறு-வால்பாறை சாலையில் முகாமிட்டது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். சிறிது நேரம் சாலையில் நின்ற யானை எந்த தொந்தரவும் செய்யாமல் சாலையோரத்திற்கு சென்றது. இதுகுறித்து ஆழியாறு வனத்துறை சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரோந்து பணி
இந்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்தனர். மயானை சாலையில் இருந்து செல்லும் வரை வாகன போக்குவரத்தை நிறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றதும் வாகன போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு-வால்பாறை சாலையில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். யானையை பார்த்தால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது என முயற்சி செய்ய கூடாது. யானை நடமாட்டம் உள்ளதால் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.