வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை
கோவை ஆனைக்கட்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இடிகரை
கோவை ஆனைக்கட்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
காட்டு யானை
கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் 50-க்கும் அதிகமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க ஆண்டு காட்டு யானை நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இந்த யானை மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்த பட்டிசாலை பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வாயில் காயம்
தகவல் அறிந்த தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காட்டு யானையை கண்காணிக்க தொடங்கினர். அப்போது யாணை வாயில் காயத்துடன் எதுவும் சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் சுற்றி திரிவது தெரியவந்தது.
இதையடுத்து சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக, கேரள வனத்துறையினர் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து யானை நிற்பது தமிழக வனப்பகுதியா, கேரள வனப்பகுதியாக என்று வனத்துறையினர் ஆலோசித்தனர். இதற்கிடையில், யானைக்கு விரைந்து சிகிச்சை அளிக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காட்டு யானையை தேடும் பணியில் மண்டல வனப்பாதுகாவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர் தினேஷ், பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர்.
சிகிச்சை அளிக்க முடிவு
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ஆனைக்கட்டி பகுதியில் சுற்றிதிரியும் யானையின் வாயில் பெரிய காயம் உள்ளது. இதனால் அந்த யானையால் தண்ணீரை குடிக்க முடியவில்லை. தும்பிக்கையால் தண்ணீரை எடுத்தாலும் அதனால் வாயில் செலுத்த முடியாமல் கீழே விழுகிறது. யானையை நேற்று அதிகாலை 3 மணி வரை கண்காணித்தோம். அந்த யானை வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கி தண்ணீர் பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு அதனை பார்க்க முடியவில்லை.
நேற்று மதியம் 12 மணியில் இருந்து வனத்துறையினர் 3 பிரிவுகளாக பிரித்து, ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடி வருகிறோம். யானை தமிழக எல்லை பகுதியோ அல்லது கேரளா எல்லை பகுதியோ, எங்கிருந்தாலும் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். மேலும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை வசதியாக ஆனைமலை வன காப்பகத்தில் இருந்து சின்னத்தம்பி உள்ளிட்ட 2 கும்கி யானைகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.