சாலையில் உலா வந்த காட்டுயானை


சாலையில் உலா வந்த காட்டுயானை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் உலா வந்த காட்டுயானை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பகுதியில் ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, டாப்சிலிப் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் கை கொடுக்காததால், குரங்கு நீர்வீழ்ச்சி வறண்டு கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ேமலும் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலையும் நிலை உள்ளது.

இதற்கிடையில் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நேற்று காலை 11 மணியளவில் ஒற்றை யானை உலா வந்தது. அந்த யானை, ஆழியாறு அணைக்கு வந்து தாகத்தை தணித்து சென்றது. இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் ஆபத்தை உணராமல் அருகில் சென்று புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், யானையை நவமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்த யானை, கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலையில் உலா வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story