வாகனங்களை வழிமறித்த காட்டு யானை


வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை காட்டு யானை வழிமறித்தது.

காட்டு யானை

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டன. தொடர்ந்து சாலையை அடிக்கடி கடந்து சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒரு வேனில் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 27-வது மைல் யூகலிப்டஸ் மரப்பண்ணை பகுதியில் சென்றபோது சாலையோரம் காட்டு யானை வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.

வாகனங்களை வழிமறித்தது

பின்னர் காட்டு யானை சாலையின் நடுவே நின்று வாகனங்களை வழிமறித்தது. சிறிது நேரத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நோக்கி காட்டு யானை தாக்க ஓடி வந்தது. இதனால் டிரைவர்கள் தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கினர். சிலர் காட்டு யானை ஓடி வருவதை கண்டு எந்த பதட்டமும் அடையாமல் செல்போனில் பதிவு செய்தனர்.

தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, 27-வது மைல் பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு புலி சாலையை கடந்து சென்றது. தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்றனர்.


Next Story