வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் கவனமுடன் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கூடலூர்,
நெலாக்கோட்டை-விலங்கூர் சாலையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் கவனமுடன் செல்ல வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
காட்டு யானை
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் போதிய பசுந்தீவனங்கள் இல்லாததால் உணவு தேடி காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் பொதுமக்கள் வைத்துள்ள அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தின்பதற்காக வீடுகளை உடைத்து வருகிறது.
காட்டு யானைகளால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடு செல்லும் சாலையில் காட்டு யானைகள் இரவு, பகல் என எந்த நேரத்திலும் உலா வந்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் நெலாக்கோட்டையில் இருந்து விலங்கூர் செல்லும் சாலையில் காட்டு யானை ஒன்று திடீரென வந்தது. அங்கு வாகனங்களை வழிமறித்தபடி நின்றது.
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை
இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் தங்களது வாகனங்களை வந்த வழியாக பின்னோக்கி ஓட்டி சென்று சற்று தொலைவில் காத்து நின்றனர்.
ஆனால், காட்டு யானை தேயிலை தோட்டத்துக்குள் செல்லாமல் சாலையில் நடந்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வந்த வழியாக திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர் வெகு நேரம் சாலையில் நின்றிருந்த காட்டு யானை தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பசுந்தீவனம் மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானை வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.