வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
தமிழக-கர்நாடக எல்லையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
தமிழக-கர்நாடக எல்லையில் காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து முதுமலை, கர்நாடக மாநில பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதனால் வனவிலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை சில சமயங்களில் கடந்து செல்வது வழக்கம்.
மேலும் சாலையோரம் வந்து நிற்பதால் சுற்றுலா பயணிகளும் வாகனங்களில் செல்லும் போது கண்டு ரசித்து செல்கின்றனர். இதுதவிர தேசிய நெடுஞ்சாலை என்பதால் தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து வாகனங்களும் அதிகளவு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் காட்டு யானை சாலையின் குறுக்கே வந்து நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து வன ஊழியர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடம் கழித்து காட்டு யானை அங்கிருந்து சென்றது. தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
வீடு சேதம்
பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி ஊருக்குள் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு சிவராஜ் என்பவரது வீட்டை முற்றுகையிட்டன. பின்னர் தும்பிக்கைகளால் சமையல் அறையில் வைக்கப்பட்டு இருந்த அரிசியை வாளியோடு தூக்கி வெளியே வீசி தின்றன. அப்போது சிவராஜ், அவரது மனைவி, மகன்கள் கோகுல், நிதீஸ் ஆகிய 4 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு அவர்கள் எழுந்து பார்த்த போது, காட்டு யானைகள் நிற்பதை பார்த்தனர். பின்னர் அச்சத்தில் ஒரு அறையில் பதுங்கி இருந்தனர்.
தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டினர். இதைத்தொடர்ந்து சாமியார் மலைஅடிவாரத்தையொட்டி யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1 மற்றும் 2 பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.