அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் பீதி அடைந்தனர்.
வால்பாறை
பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் பீதி அடைந்தனர்.
அரசு பஸ்
வால்பாறை பகுதியில் இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் காட்டுயானைகள் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பஸ் ஒன்று, நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பெரிய கல்லாறு எஸ்டேட் பகுதிக்கு சென்றது. பின்னர் மீண்டும் அங்கிருந்து 7 மணிக்கு வால்பாறை நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் அய்யப்பன் ஓட்டினார். கண்டக்டராக செந்தூரபாண்டி இருந்தார்.
பரபரப்பு
பெரிய கல்லாறு எஸ்டேட் சாலையில் ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென ஒரு காட்டுயானை பஸ்சை மறித்தது. இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பீதியில் உறைந்தனர். உடனே பஸ்சை டிரைவர் பின்னோக்கி இயக்கி நிறுத்தினார்.
நீண்ட நேரம் ஆகியும் சாலையை விட்டு காட்டுயானை செல்லாமல், சாலையோர மரக்கிளையை முறித்து தின்று கொண்டு இருந்தது. அரை மணி நேரத்துக்கு பிறகு காட்டுயானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே அரசு பஸ் முன்னோக்கி இயக்கி செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.