தேவர்சோலை அருகே தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி காட்டு யானை அட்டகாசம்
தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை ஒன்று தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
கூடலூர்
தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை ஒன்று தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
மரங்களை சாய்த்த காட்டு யானை
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம் பகுதியில் காட்டு யானை ஒன்று தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வனத்துறையினரும் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வனத்துறையினருக்கு போக்கு காட்டியபடி காட்டு யானை ஊருக்குள் வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 காட்டு யானைகள் ஊருக்குள் வந்தது. அதில் 2 காட்டு யானைகளை அப்பகுதி மக்கள் வனத்துறையினருடன் இணைந்து விரட்டி அடித்தனர். ஆனால் மற்றொரு யானை ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த அம்மணி என்பவர் பராமரித்து வந்த தென்னை மரங்களை காட்டு யானை வேருடன் பிடுங்கி சாய்த்தது.
தடுக்க நடவடிக்கை
மேலும் காட்டு யானை நடமாட்டத்தால் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, முதுமலை எல்லையோரம் அகழி ஆழப்படுத்தாமல் உள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாக புகார் தெரிவித்தனர்.
கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் கூறும்போது:- ஊருக்குள் வரும் காட்டு யானையை பொதுமக்கள் கொடுக்கும் தகவலின் பேரில் உடனுக்குடன் சென்று விரட்டப்படுகிறது. மேலும் ஊருக்குள் யானை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.