நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானை
கூடலூரில் நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காட்டுயானை
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஹெல்த்கேம்ப், கெவிப்பாரா, ராக்லேண்ட் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் தினமும் இரவில் காட்டுயானை ஒன்று, ஊருக்குள் திரிந்து பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. மேலும் தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹெல்த்கேம்ப் போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் அந்த காட்டுயானை புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த பலாக்காய்களை பறித்து தின்றது. இதை கண்ட பொதுமக்கள், அந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
விரட்டியடிப்பு
ஆனால் காட்டுயானை அங்கிருந்து செல்லவில்லை. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் சென்றனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை ஊமைத்துரை காடு வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அதன் பின்னரே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினமும் இரவில் காட்டு யானை வீடுகளை முற்றுகையிடுவதால் பாதுகாப்பு இல்லாமல் வசித்து வருகிறோம். எனவே காட்டுயானை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தை காட்டுயானை உடைத்து, 2 அரிசி மூட்டைகளை வெளியே தூக்கி வீசியது. பின்னர் அரிசியை தின்றது. மேலும் ரவிச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது. இதை அறிந்து வந்த பிதிர்காடு வனத்துறையினர், காட்டுயானையை விரட்டியடித்தனர்.