வாயில் காயத்துடன் சுற்றிய காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது


வாயில் காயத்துடன் சுற்றிய காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே வாயில் காயத்துடன் சுற்றிய காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே வாயில் காயத்துடன் சுற்றிய காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

காயத்துடன் காட்டுயானை

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாட்களாக வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. அது விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததோடு பொதுமக்களையும் விரட்டி வந்தது. இதனால் அந்த காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

அதன்படி ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மேற்பார்வையில் கால்நடை டாக்டர் சுகுமாரன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் சதாசிவம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.

மயக்க ஊசி செலுத்தி...

இதையடுத்து டாப்சிலிப் முகாமில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை நேற்று முன்தினம் இரவில் ஆதிமாதையனூர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் அங்குள்ள கோம்பை பகுதியில் நின்றிருந்த காட்டுயானைக்கு மயக்க ஊசி ெசலுத்தப்பட்டது. தொடர்ந்து கும்கி யானை உதவியுடன் அந்த காட்டுயானை பிடிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நாக்கின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். காயம் பெரிய அளவில் உள்ளதால், தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர் சிகிச்சை

இதுகுறித்து டாக்டர் சுகுமாரன் கூறுகையில், பிடிபட்ட பெண் யானைக்கு 15 வயது இருக்கும். ஆண் யானை தந்தத்தால் குத்தியதில் வாயில் காயம் ஏற்பட்டு இருக்கலாம். காயம் ஏற்பட்டு 3 வாரம் இருக்கும். தீவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் தண்ணீர் மட்டுமே குடித்து வந்ததால் உடல் மெலிந்து காணப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், பொள்ளாச்சி அருகே வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என்றார்.

இதையடுத்து உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர்கள் திவ்யா, செல்வராஜ், பிரபு, திருமுருகன், வனவர்கள் பிரபு, நஞ்சுகுட்டி, சகாதேவன், மற்றும் வனத்துறையினர் பிடிபட்ட யானையை லாரியில் ஏற்றி வரகளியாறு முகாமுக்கு கொண்டு சென்றனர்.


Next Story