கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து பட்டதாரி பெண் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து பட்டதாரி பெண் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
பட்டதாரி பெண்
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி.காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். கூலித்தொழிலாளி. இவர், தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சுஜி (வயது 20) என்ற பட்டதாரி பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் தாதகாப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சுஜி சென்றுவிட்டார்.
இதனிடையே, காதல் கணவனை மறக்க முடியாமல் நேற்று சுஜி தனது கணவர் வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளார். ஆனால் அவரிடம் தமிழ்செல்வன் பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறி எருமாபாளையம் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள 100 அடி ஆழ கிணற்றுக்குள் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
மீட்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் பூசாரி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அங்கிருந்த வாலிபர்கள் ஓடிவந்து கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் தத்தளித்த சுஜியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுஜியிடமும், அவரது கணவர் தமிழ்ச்செல்வனிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.