4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்-புரோக்கர் சிக்கினர்;திருமண மோசடி கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள்


4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்-புரோக்கர் சிக்கினர்;திருமண மோசடி கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள்
x

கோபி அருகே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மற்றும் புரோக்கர் போலீசில் சிக்கியுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

கோபி அருகே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மற்றும் புரோக்கர் போலீசில் சிக்கியுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெசவு தொழிலாளி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு சரவணன் (வயது 35) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சரவணன் கைத்தறி நெசவு செய்து வருகிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

பெண் பார்த்தனர்

சரவணனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தனர். மேலும் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பரிசபாளையத்தை சேர்ந்த மலர் என்ற பெண் புரோக்கரிடம், திருமணத்துக்கு பெண் பார்க்க சரவணனின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.

இதனால் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த செல்வராசு என்பவரின் மனைவி லட்சுமி என்கிற விஜயலட்சுமி (60) என்பவர், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடைய மகள் சரிதா (27) என்ற ஏழை பெண் இருப்பதாக சரவணனிடம் கூறி உள்ளார்.

கமிஷன்

இதைத்தொடர்ந்து சரவணனும், சரிதாவை பார்த்து உள்ளார். அப்போது சரிதா தான் தற்போது ஆதரவு இல்லாமல் ஈரோட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். மேலும் சரிதாவின் பெரியம்மா என அறிமுகப்படுத்திக்கொண்ட விஜயலட்சுமி, பெற்றோர் இல்லாத நிலையில் சரிதாவின் குடும்பத்தை கவனித்துக்கொள்வதாக கூறியதுடன், திருமண வேலைகளை சொந்த மகளுக்கு செய்வது போன்று முன்னின்று செய்துள்ளார்.

இதை அப்படியே உண்மை என நம்பிய சரவணன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார். திருமணம் உறுதியானதும், 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கமிஷனாக புரோக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறி உள்ளார்.

திருமணம்

இதைத்தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் 3 லட்சம் ரூபாயை சரவணன் கடனாக வாங்கி உள்ளார். இதில் புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார். மீதி பணத்தை திருமணத்துக்காக செலவு செய்து உள்ளார். கடந்த 20.8.2022 அன்று தாசப்பகவுண்டன் புதூரில் உள்ள ஒரு கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சரிதாவை சரவணன், திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரிதா வெளியே சென்று இருந்தார். அப்போது செல்போனை அங்கு வைத்துவிட்டு சென்றுள்ளார். திடீரென அந்த செல்போனை எடுத்து வாட்ஸ் அப்பை சரவணன் பார்த்து உள்ளார். அதில் சரிதாவின் பெரியம்மா என்று கூறப்பட்ட விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ்களை சரிதா அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

நேரடியாக பேசாமல் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என நினைத்த சரவணன், அந்த வாய்ஸ் மெசேஜை கேட்க தொடங்கினார். வாய்ஸ் மேசேஜை கேட்டதும் அவர் அதிர்ந்து போனார்.

மோசடி கும்பலை சேர்ந்தவர்

அந்த வாய்ஸ் மெசேஜில், சரிதா கூறுகையில், 'இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். ஆஸ்பத்திரிக்கு போகனும். பார்க்க ஆள் இல்லை. ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு.,' என்று பேசி உள்ளார்.

அடுத்த வாய்ஸ் மெசேஜில், 'இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி வா. ஊருக்கு போய், குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன். வேறு ஏதாவது கனெக்சன் இருக்கானு பாரு. அவன் கிறுக்கனா இருக்கனும். ஒரு வாரத்துல போயிட்டு திரும்பி இங்க வரவேண்டும். வேறு ஏதாவது ஆள் இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இந்த மாதிரி விவரமான ஆளு வேண்டாம். வயசு அதிகமாக இருக்கிற மாதிரி பாரு. 2 நாளில் தப்பிக்கிற மாதிரியான ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போய் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. ஏகப்பட்ட சிக்கலில் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் பிரியாக பேச முடியலை. அவர்கிட்ட இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும் என சொல்லி இருக்கேன். நீ அழைச்சுட்டு போக வந்தா விட்டுருவாங்க. வந்து அழைச்சுட்டு போ. இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு. நீ வந்தால் போதும்,' என்று பேசி உள்ளார்.

இந்த வாய்ஸ் மெசேஜை கேட்டதும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. மனைவி என நினைத்து பாசத்தை கொட்டிய பெண் மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் வாயடைத்து போனார்.

நண்பருக்கு பெண் பார்க்க...

இதுபற்றி சரவணன் தனது நண்பர்களிடம் கூறினார். இந்த மோசடி கும்பலை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டிய சரவணன் நண்பர்கள் கூறிய ஆலோசனைபடி சரிதா பேசிய வாய்ஸ் மெசேஜ் குறித்து, எதையும் சரிதாவிடம் காட்டிக்கொள்ளாமல், தனது நண்பர் ஒருவருக்கு பெண் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், உங்கள் பெரியம்மாவிடம் கூறி ஏதாவது பெண் இருந்தால் பார்க்க சொல்லு என சரவணன் கூறி உள்ளார்.

ரூ.80 ஆயிரம் கமிஷன்

அதை நம்பிய சரிதாவும், விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு தனது கணவரின் நண்பர் ஒருவருக்கு பெண் தேவை என கூறி உள்ளார்.

விஜயலட்சுமியும், தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், அவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து பெண்ணின் புகைப்படத்தை அனுப்புமாறு சரவணன் கூறவே, விஜயலட்சுமியும், ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார்.

இதேபோல் மாப்பிள்ளை புகைப்படத்தை விஜயலட்சுமி கேட்கவே, சரவணன், தனது நண்பர் ஒருவரின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு தனது நண்பர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், மணப்பெண்ணை அழைத்து வந்தால் தனக்கு நடந்தது போல் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.

அதற்கு விஜயலட்சுமி தனக்கு திருமணம் கமிஷன் எதுவும் வேண்டாம் என்றவர், மற்ற 4 புரோக்கர்களுக்கு மட்டும் கமிஷனாக ரூ.80 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

வசமாக சிக்கினர்

உடனே சரவணனும், பெண்ணை அழைத்துக்கொண்டு நேரில் வந்து விடுங்கள், திருமணத்திற்கு முன்பு கமிஷன் தொகை ரூ.80 ஆயிரத்தை வாங்கி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்தார். அதை நம்பிய விஜயலட்சுமியும். விருதுநகரில் இருந்த பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு வாடகை காரில் தாசப்பகவுண்டன் புதூருக்கு நேற்று முன்தினம் காலை வந்து சேர்ந்தார்.

விஜயலட்சுமி மற்றும் அவருடன் வந்த பெண்ணை வீட்டிற்குள் சரவணன் அழைத்து சென்றார். வசமாக சிக்கி கொண்ட அவர்களை நண்பர்கள் உதவியுடன், பிடித்து சரவணன் விசாரித்தார்.

பரபரப்பு தகவல்கள்

பின்னர் இதுபற்றி பங்களாப்புதூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சரவணனின் வீட்டிற்கு சென்று அந்த கும்பலிடம் விசாரணை நடத்தினர். மேலும் சரிதா, விஜயலட்சுமி, விஜயா ஆகியோரை பங்களாப்புதூர் போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

தி்ருமணமாகாத இளைஞர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களையும் குறிவைத்து திருமணம் என்ற பெயரில் கமிஷன்பெற்று மோசடி செய்து வரும் கும்பல்,' என தெரிய வந்தது. மேலும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் கரூர் மாவட்டம் திருமாநல்லூரை சேர்ந்த விஜயா (36) என்பதும் தெரிய வந்தது.

4 ஆண்களை ஏமாற்றி..

இதையடுத்து விஜயலட்சுமியின் செல்போன், சரிதாவின் செல்போனை பிடுங்கி சோதனை செய்தனர். அதில் சரிதா ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை இதே போன்று மோசடியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு ரூ.2½ லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியதும், அந்த டிரைவர் சரிதாவை தேடி கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டதுடன், வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் என்று விரட்டி விட்டதும் தெரிய வந்தது.

சரிதா சரவணன் மட்டுமின்றி ஏற்கனவே ஈரோட்டில் வேறு ஒரு டிரைவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடமும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியது தெரியவந்தது. மேலும் ஒரு ஆணையும் திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்ததும் தெரிய வந்தது.

மேலும் 'விஜயலட்சுமியின் கணவர் ராமேஸ்வரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் என்பதும், அவருக்கு ராஜா என்ற மகன் இருப்பதும், தற்போது சரவணனின் நண்பருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அழைத்து வந்த விஜயாவுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளதுடன், மகளுக்கு திருமணம் ஆன நிலையில் திருமண மோசடியில் ஈடுபடுவதற்காக விஜயலட்சுமியுடன் சேர்ந்து விஜயா வந்த தகவலும் வெளியானது.

சரிதா திருமணம் செய்த இன்னொரு நபர் யார்? இன்னும் இதுபோல் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர் என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த மோசடி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

இந்த திருமண மோசடி சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story