பள்ளிப்பட்டு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாப சாவு


பள்ளிப்பட்டு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாப சாவு
x

பள்ளிப்பட்டு அருகே நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

கூலி தொழிலாளி

பள்ளிப்பட்டு அருகே திருமல ராஜுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி ஆச்சாரி. இவரது மனைவி ரோசி (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. குருசாமி ஆச்சாரி 2 ஆண்டுக்கு முன் இறந்து போனார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ரோசி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குர்ரப்ப நாயுடு நிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரோசி குர்ரப்ப நாயுடு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அவரது அக்கா மகன் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் தேடி சென்றனர்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அந்த நிலத்திற்கு அருகே அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை ரோசி தெரியாமல் மிதித்து மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து அவரது அக்கா மகன் மணிகண்டன் (35) பள்ளிப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று ரோசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story