நகராட்சி அலுவலகம் முன்பு விஷம் குடித்த பெண் தூய்மை பணியாளர்


நகராட்சி அலுவலகம் முன்பு விஷம் குடித்த பெண் தூய்மை பணியாளர்
x

நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தூய்மை பணியாளர் விஷம் குடித்தார்.

பெரம்பலூர்

விஷம் குடித்தார்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஆரணி(வயது 55). இவர் கடந்த 7 ஆண்டுகளாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு வந்த ஆரணி பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென்று எலி மருந்தை(விஷம்) தின்றுவிட்டார். பின்னர் அவர் வாந்தி எடுத்தார். இதனை கண்ட சக தூய்மை பணியாளர்கள் ஆரணியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் ஆரணியிடம் விசாரணை நடத்தினர். ஆரணி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் கிராமம் அருகே தூய்மை பணி செய்து வந்தார். அங்கு அவரது பணி திருப்திகரமாக இல்லை என்று கூறி மேற்பார்வையாளர் ஒருவர், ஆரணியை கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை பகுதிக்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பணியிட மாற்றம் செய்தது பிடிக்காததால், தன்னை மீண்டும் பழைய இடத்திலேயே பணி செய்ய நியமிக்கக்கோரியுள்ளார்.

ஆனால் பணியிட மாறுதல் கிடைக்காததால் நேற்று வேலைக்கு வந்த ஆரணி, நகராட்சி அலுவலகம் அருகே எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். நகராட்சி ஒப்பந்த பெண் தூய்மை பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story