மகள்-மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்
திண்டுக்கல்லில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பெண், தனது மகள்-மகனுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குளிர்பானத்தில் விஷம்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்தவர் 35 வயது பெண். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மனநல ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் 15 வயது மகள், 12 வயது மகனையும் அழைத்து வந்திருந்தார்.
அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், பெண் உள்பட 3 பேரையும் ஊருக்கு அனுப்பி வைக்க ஆட்டோவில் ஏற்றினர்.
அப்போது சிறுவனுக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விசாரித்த போது, குளிர்பானம் குடித்ததாக அவன் கூறினான். அதுபற்றி அவன் தாயிடம் கேட்ட போது குளிர்பானத்தில் விஷம் கலந்து 3 பேரும் குடித்ததாக தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து 3 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த போது எதற்காக குளிர்பானத்தில் விஷம் கலந்து தானும் குடித்து விட்டு, மகன் மற்றும் மகளுக்கு அவர் கொடுத்தார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த போது மகள், மகனுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.