அடமானம் வைத்த வீட்டை அபகரித்ததால் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு


அடமானம் வைத்த வீட்டை அபகரித்ததால் மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு
x

அடமானம் வைத்த வீட்டை கடன் கொடுத்தவர் அபகரித்ததால் மகள்களுடன் வந்த பெண் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

அடமானம் வைத்த வீட்டை கடன் கொடுத்தவர் அபகரித்ததால் மகள்களுடன் வந்த பெண் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

ஆரணி கார்த்திகேயன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அகிமா பீபி. இவர்களுக்கு மமுதா, சுவேதா உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அகிமாபீபி நேற்று தனது மகள்களை அழைத்துக்கொண்டு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகம் முன் அவர் திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விரைந்து வந்து அகிமாபீபியிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றி அமரச் செய்தனர்.

அங்கு உடனடியாக வந்த ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் அகிமாபீபி மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.

சந்தவாசலை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2017-ம் ஆண்டு வீட்டை அடமானம் வைத்து இவர்கள் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என கூறி ரூ.3 லட்சமும், 2020-ம் ஆண்டு மீண்டும் ரூ.1 லட்சமும் வாங்கி உள்ளனர்.

அப்போது கடன் கொடுத்தவர் அவரது மகன் பெயரில் ஆரணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வீட்டை பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாக ஆரணி கொசப்பாளையம் களத்து மேட்டு தெருவை சேர்ந்த உறவினர் மற்றும் சிலர் சேர்ந்து அகிமாபீபி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டி வந்துள்ளனர்.

பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்

ஆனால் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர் தனது ஆதரவாளர்கள அழைத்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பொக்லைன் எந்திரத்துடன் வீட்டை இடிக்க வந்து இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசில் புகார் செய்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவேதான் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றோம் என அகிமாபீபி கூறியுள்ளார்.

வருகிற 1-ந் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அப்போது மோசடி செய்து எழுதிக் கொண்ட வீட்டை மீட்டு தர வேண்டும் எனவும் அகிமாபீபி வலியுறுத்தினார். இது சம்பந்தமாக போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story