மகனை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாக கூறி கதறி அழுத பெண்


மகனை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாக கூறி கதறி அழுத பெண்
x

செவித்திறன் குறைபாடு உள்ள தனது மகனை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

செவித்திறன் குறைபாடு உள்ள தனது மகனை பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் பெண் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

செவித்திறன் குறைபாடு

திருவாரூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் குஞ்சப்பா. டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தமயந்தி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பவின்(வயது 10), திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

பவினுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதால் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. செவித்திறன் குறைபாடு பிரச்சினையால் முழுமையாக பேச முடியாமல் திக்கி, திக்கி பேசி வருகிறான். இதனால் அவனுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் கதறி அழுத தாய்

பவினின் தங்கை தர்ஷிகா அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று தமயந்தி தனது மகன் பவின் மற்றும் 4 வயது மகனான நவீன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு தனது மகன்களுடன் அழுதபடி கலெக்டரை சந்திக்க வாசலில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், தமயந்தியை அழைத்து விசாரணை நடத்தினார்.

பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி

அப்போது அந்த பெண், தனது மகன் பவின் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருவதாகவும், செவித்திறன் குறைபாடு காரணமாக சரிவர வாய் பேச முடியாததால் பள்ளியில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் கூறி கதறி அழுதார்.உடனடியாக அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் மாவட்ட ஊராட்சி தலைவர் அழைத்து சென்று உரிய உதவிகள் வழங்க அறிவுறுத்தினார்.இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் நடத்திய விசாரணையில், பவின் படிக்கும் பள்ளியில் அவரை சக மாணவர்களுடன் அமர வைக்காமல் தனியாக அமர வைப்பதாகவும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பள்ளியில் அவனை சேர்க்கும்படியும், அதே பள்ளியில் படிக்கும் அவனது தங்கை தர்ஷிகாவையும் வேறு பள்ளியில் சேர்க்குமாறும் பள்ளி நிர்வாகம் நிர்பந்திப்பதாக கூறி தமயந்தி கதறி அழுதார்.

மன உளைச்சல்

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் எனது மகனை சக மாணவர்களுடன் படிக்கும்படி சாதாரண பள்ளியில் சேர்த்து விடுமாறு அறிவுறுத்தியதால் தான் இப்பள்ளியில் சேர்த்தேன். ஆனால் பள்ளியில் சக மாணவர்களுடன் அமர விடாமல் தனியாக அமர வைப்பதால் அவனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது என்றார்.

இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

இதை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின்படி மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

பரபரப்பு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது மகன்களுடன் வந்து பெண் ஒருவர் கதறி அழுத சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story