காதல் திருமணம் செய்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை
மட்றப்பள்ளி கிராமத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது23), கட்டிட உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் கம்பெனியில் பணிபுரியும் போது உளுந்தூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஆதிலட்சுமி (19) என்பவரை காதலித்துள்ளார். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மட்றப்பள்ளியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சூர்யா விட்டிற்கு வெளியே படுத்து தூங்கி உள்ளார். ஆதிலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உறவினர்கள் முற்றுகை
காலையில் வழக்கம் போல வீட்டின் கதவை தட்டி திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மின் விசிறியில் ஆதிலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் ஆதிலட்சுமியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதிலட்சுமியின் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் ஆதிலட்சுமி சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பிரேத பரிசோதனை முடிவு கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் இதுகுறித்து சப். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.