கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற பெண்


கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற பெண்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலில் பிறந்ததால் கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

கள்ளக்காதலில் பிறந்ததால் கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை விட்டுவிலகினார். அந்த பெண்ணுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் அவரது அக்காள் ஆதரவு கரம் நீட்டி தனது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க செய்தார்.

அப்போது அந்த பெண்ணுக்கும், அவரது அக்காளின் கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் வரம்பு மீறி தவறான உறவில் ஈடுபட்டனர்.

இதில் கர்ப்பமான அந்த பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந் தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் நேற்று முன்தினம் முதல் காணவில்லை.

சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் குழந்தையுடன் பெண் இல்லாததைக் கண்டு உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கர்நாடகாவில் கண்டுபிடிப்பு

அதன் பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுத்து பேசவில்லை. செல்போன் டவர் மூலம் கிடைத்த சிக்னலில் அந்த போன் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மீட்பு

இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

மருத்துவமனையிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் தான் முதலில் விசாரணையை தொடங்கினோம். பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார். அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். நகருக்கு எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

நாடகமாடினார்

இது குறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார். பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story