கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு
தேவகோட்டையில் பட்டப்பகலில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இதில் கீழே விழுந்ததில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
தேவகோட்டை
தேவகோட்டையில் பட்டப்பகலில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. இதில் கீழே விழுந்ததில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
நகை பறிப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த புளியால் காமராஜர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவரது மனைவி சண்முகவள்ளி (40). இவர்கள் இருவரும் தேவகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு ரேஷன் அட்டை பதிவு செய்வதற்காக சென்றனர். பின்னர் அலுவலக வேலை முடிந்த பின் பிற்பகல் 3 மணி அளவில் திருச்சி- ராமேசுவரம் பைபாஸ் வழியாக புளியாலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
செந்தில்குமார் அந்த மொபட்டை ஓட்ட பின் பக்கம் சண்முகவள்ளி அமர்ந்திருந்தார். உதையாச்சி என்ற இடம் அருகே சென்ற போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த 2 ஆசாமிகள், திடீரென்று சண்முகவள்ளி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். சங்கிலியை பறித்தவுடன் அதை அறுக்க விடாமல் சண்முகவள்ளி கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் பாதி வழிப்பறி கொள்ளையர் கையிலும், மற்ெறாரு பாதி சண்முகவள்ளி கையிலும் இருந்தது.
கீழே விழுந்ததில் பெண் படுகாயம்
இதனால் சண்முகவள்ளி இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அதற்குள் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சண்முகவள்ளியை அக்கம், பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.