காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி சாவு
பந்தலூர் அருகே மகளுடன் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே மகளுடன் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஸ் நிறுத்தத்துக்கு...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கோரஞ்சாலில் உள்ள சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சுனிதா(வயது 42). இவர்களது மகள் அஸ்வதி(20). இவர் கூடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்.(சி.ஏ.) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் அஸ்வதி கல்லூரிக்கு செல்வதற்காக தனது தாயார் சுனிதாவுடன் கோரஞ்சாலில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார்.
காட்டுயானை தாக்கியது
அப்போது சாலையோரம் உள்ள மூங்கில் காட்டில் இருந்து குட்டியுடன் காட்டுயானை வெளியே வந்தது. அவை சாலையை கடந்து செல்ல முயன்றன. அந்த சமயத்தில் சாலையில் நடந்து வந்த அஸ்வதி மற்றும் சுனிதாவை, தாய்யானை கண்டதும் துரத்த தொடங்கின.
இதை சற்றும் எதிர்பாராத தாயும், மகளும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும் விடாமல் துரத்தி வந்த தாய் யானை அவர்கள் 2 பேரையும் துதிக்கையால் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.
சிகிச்சை பலனின்றி...
அவர்களை கண்டதும் காட்டுயானை குட்டியுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு அவர்கள் தாய்-மகளை மீட்டு சுல்தான்பத்தேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் சுனிதா, கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் சுனிதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.