பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் பெண்ணின் எலும்பு கூடு
பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் பெண்ணின் எலும்பு கூடு கிடந்தது.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். அவை அறுவடை செய்யப்பட்ட நிலையில், கரும்பு தோகையை தீ வைத்து நேற்று எரிக்கப்பட்டது. அப்போது அங்கு மனித எலும்பு கூடு கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாய தொழிலாளர்கள், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.
இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனித எலும்பு கூட்டை பார்வையிட்டனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் அறிவியல் நிபுணர்கள் நேரில் வந்து எலும்பு கூடுகளை சேகரித்தனர்.
போலீசார் விசாரணை
அதில் கை எலும்புகளில் 2 செப்பு காப்பு அணியப்பட்டிருந்தது. பாதி எரிந்த நிலையில் சேலையும் கிடந்தது.
இதன் மூலம் பெண்ணின் எலும்பு கூடாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேல்குமாரமங்கலம் காலனியை சேர்ந்த முனியன் மனைவி காசியம்மாள்(வயது 80) என்பவர் என்பதும், கடந்த 25.8.2023 அன்று முதல் காணவில்லை என்று பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டிருந்ததும், காசியம்மாள் கரும்பு தோட்டத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.