தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டி, தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர், தனது தாய் சீனியம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி பால்பாண்டி அப்பகுதியில் மலையடிவாரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், பால்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பால்பாண்டி இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பால்பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், பால்பாண்டியை தாக்கினார். இதனை தடுக்க வந்த அவரது தாய் சீனியம்மாளையும் விக்னேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பால்பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.