வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தொழிலாளி சாவு
விருத்தாசலம் அருகே கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சியபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
விருத்தாசலம்
விவசாய தொழிலாளி
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 56). விவசாய தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்களிடம் சக்கரமங்கலத்தில் உள்ள விவசாயி ரவி என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.
மின்சாரம் தாக்கி பலி
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடி சக்கரமங்கலத்தில் உள்ள வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பழனிவேல் இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
பின்னர் இது பற்றிய தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கரும்பு வயலுக்கு பழனிவேல் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து இருப்பதாக தெரிகிறது.
பின்னர் பழனிவேலுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.