மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி
மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி
கிணத்துக்கடவு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட தேன் பள்ளி அருகே அப்துல்லாபுரம் காலனி முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 34). கூலி தொழிலாளி. இவர் தேனியில் உள்ள தனியார் சோலார் பேனல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நந்தகுமார், தன்னுடன் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூரில் உள்ள ஜெயந்தி மசாலா நிறுவன கட்டிட மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
கட்டிடத்தின் மேற்கூரையில் அமர்ந்து பணி செய்து கொண்டு இருந்தபோது, அதில் இருந்த கண்ணாடி சீட் உடைந்து நந்தகுமார் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.