நீலகிரியை சேர்ந்த இளம்பெண் விமானியானார்
நீலகிரியை சேர்ந்த இளம்பெண் விமானியானார் .
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் படுகர் இன வாழ்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தை சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் சேர்ந்து கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அது குறித்த விவரம் வருமாறு:-
கோத்தகிரி அருகே நெடுகுளா குருக்கத்தி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மீரா. இவர்களது மகள் ஜெயஸ்ரீ. இவர் பள்ளி படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். இதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐ.டி துறையில் வேலை பார்த்தார். இதன் பின்னர் விமானியாக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது:- பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் வழக்கமான வேலைகளை விட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநிலை பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணிளை இழக்க நேரிடும். எனவே உடல்நிலை மற்றும் மனநிலை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் உறுதி அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்பகால பள்ளி படிப்பும் அங்கிருந்து ஆசிரியர்களும் முக்கிய காரணமாகும். நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.