கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மசாவு:உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் திருவெண்ணெய்நல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரை சேர்ந்தவர் திருவள்ளுவன். இவரது மகள் சுபா ஆடலரசி (வயது 26). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த 23-ந்தேதி இரவு கல்லூரி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சுபாஆடலரசி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட இடத்தில், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும், இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுபாஆடலரசியின் தரப்பினர் புகார் செய்தனர். ஆனால் அந்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
எனவே இறந்து போன பெண்ணுக்கு நீதி கேட்டும், அவரது இறப்பிற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், திருவெண்ணெய்நல்லூரில் கடலூர் - திருக்கோவிலூர் சாலையில் சுபாஆடலரசியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, சுபாஆடலரசியின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், அப்போது தான் அவரது உடலை அடக்கம் செய்வோம், அதுவரையில் அவரது வீட்டிலேயேதான் வைத்திருப்போம் என்று தொிவித்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.